டெல்லி உழவு இயந்திர பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் குறித்து தவறாக கருத்து பதிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக டெல்லி எல்லைகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 26ம் திகதி குடியரசு தினவிழா டெல்லியில் இடம்பெற்ற போது விவசாயிகள் நடத்திய உளவு இயந்திரப் பேரணியில் பாரிய அளவில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறை தொடர்பில் சசிதரூர், ராஜ்தீப், சர்தேசாய் ஆகிய முக்கியஸ்தர்களுக்கு எதிராக காவல்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ள அதேவேளை நொய்டா காவல்துறை சார்பாக தேச துரோக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வன்முறையின் போது விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில்இ காவல்துறையினர் துப்பாக்கி நடத்தி துப்பாக்கி சூட்டிலேயே அவர் உயிரிழந்ததாக சசி தரூர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டிலேயே குறித்த விவசாயி உயிரிழந்ததாக விவசாய அமைப்புகளை மேற்கோள்காட்டி ராஜ்தீப் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்களும் செய்தி வெளியிட்டிருந்தனர்.
இந்த சம்பவம் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
எனவே அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையை இரத்துச் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மத்திய அரசின் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணிஇ குறித்த நபர்கள் சமூக வலைதளங்களில் பரப்பிய இந்த தகவல்கள் அன்றைய தினம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது என வாதிட்டிருந்தார்.
அதன் காரணமாகவே பாரிய சேதங்கள் ஏற்பட்டதாகவும் ஆகவே அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் வழங்க கூடாது என்று குறிப்பிட்டார்.
எனினும் அரச தரப்பு சட்டத்தரணியின் வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது இடைக்காலமாக இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கு 2 வாரங்களுக்கு பின்னர் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.