தென்னாபிரிக்காவின் முடிவு குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கரிசனை

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசி விநியோகம் இடைநிறுத்தப்பட்டமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கரிசனை வெளியிட்டுள்ளது.

உள்நாட்டில் பரவிவருகின்ற விகாரமடைந்த வைரஸ்சிற்கு எதிராக அஸ்ராசெனிக்கா தடுப்பூசி குறைந்த அளவான செயற்றிறனுடன் செயற்படுகின்றமை ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்தே தென்னாபிரிக்கா, குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாரதூரமான நிலைமைகளை தடுக்கும் வகையிலான செயற்றிறனுடன் அஸ்ராசெனிக்கா நிறுவனத்தின் தடுப்பூசி இருக்கும் என நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மட்டுப்படுத்தப்பட்ட அளவான மாதிரிகளை வைத்தே ஆய்வு முடிவு பெறப்பட்டுள்ளதாகவும் இளையோர் மற்றும் உடல் ஆரோக்கியமிக்கவர்களே இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

எனினும் விகாரமடைந்த வைரஸ்சிற்கு ஏற்றவாறு தடுப்பூசியில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனவும் ஸ்தாபனத்தின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.