கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான 2019 ஆம் ஆண்டு ஒத்துழைப்பு உடன்படிக்கையின் உறுதிப்பாட்டில் இருந்து இலங்கை விலகிய விதம் குறித்து இந்திய அரசாங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று இலங்கையின் ஜனாதிபதியையும் பிரதமரையும் தனித்தனியாக சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவின் உத்தியோகபூர்வமான அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுடன் இது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும்; இல்லாமல் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் கிழக்கு முனையத்தை தக்கவைப்பதற்கான தீர்மானத்தை இலங்கை அமைச்சரவை எடுத்த மறுநாளே பாக்லே இலங்கை தலைவர்களை சந்தித்தார்.
நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் பௌத்த மதகுருமார்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இந்த முடிவை எடுத்தது.
இதேவேளை இந்த உடன்படிக்கையின் உறுதிப்பாட்டில் இருந்து இலங்கை விலகியமை குறித்து ஜப்பானும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நேற்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்து இந்த அதிருப்தியை வெளியிட்டார். இதற்கிடையில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய இலங்கை இப்போது முன்வந்துள்ளது.
எனினும் இது தொடர்பாக இந்திய தரப்பு இன்னும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.