கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லீம் மக்களின் ஜனாஸாக்களை புதைப்பதற்கு அனுமதி வழங்கும் ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வின் அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்றுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், முஸ்லீம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.
எனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை தோற்கடிக்கும் நோக்குடனேயே ஜனாஸாக்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக பாகிஸ்தானும் காணப்படும் நிலையில், இம்ரான் கானின் இலங்கைக்கான விஜயம் முக்கியத்துவம்மிக்கதாக மாறியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு முஸ்லீம் நாடுகள் ஆதரவுளிக்கும் என்ற செய்தியுடன் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்வதாக ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 22 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டை வந்தடைவார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் கூறியுள்ளது
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸஇ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸஇ வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இம்ரான் கானின் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.