ஸ்புட்னிக் வீ தடுப்பூசி மருந்தின் தயாரிப்பானது எதிர்வரும் கோடைகாலத்தில் இந்தியாவில் முழுவீச்சில் ஆரம்பிக்கப்படும் என ஸ்புட்னிக் மருந்தை தயாரித்துள்ள ரஷ்ய நிறுவனமும் இந்தியாவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான பனேசியா பயோடெக்கும் கூட்டாக அறிவித்துள்ளன.
முதல் கட்ட ஸ்புட்னிக் வீ தடுப்பூசி மருந்தானது, ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பனேசியா பயோடெக் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் தரக் கட்டுப்பாட்டிற்காக ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் உள்ள கமலேயா மையத்திற்கு அனுப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் ஆண்டு ஒன்றுக்கு 100 மில்லியன் ஸ்புட்னிக் வீ தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என ஆர்.டி.ஐ.ஏப் எனப்படும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் பனேசியா பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஆகியன அறிவித்திருந்தன.
இந்தியாவில் ஸ்புட்னிக் வீ தடுப்பூசி மருந்தானது தயாரிக்கப்படும் செயற்பாடானது, கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் மிக முக்கிய படிக்கல் என ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி கூறியுள்ளார்.
இதேவேளை இந்தியாவின் ஹைதராபாத்தை தலைமையமாக கொண்ட டொக்டர் ரெட்டிஸ் ஆய்வு நிறுவனமும், ஸ்புட்னிக் வீ தடுப்பூசி மருந்தை தயாரிக்கவும் விநியோகிக்கவும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.