கொரோனா வைரஸ்சிற்கு எதிராக உலகம் யுத்தமொன்றையே மேற்கொண்டுவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேகிரஸ் கூறியுள்ளார்.
ஆகவே தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கு தேவையான ஆயுதங்களின் சமத்துமற்ற அணுகலை இல்லாது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபானத்தின் உறுப்பு நாடுகளின் வருடாந்த அமர்வில் பங்கேற்று உரையாற்றிய அன்டோனியோ குத்தேகிரஸ், கொரோனா வைரஸ் நெருக்கடியானது சுனாமி போன்ற அழிவை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 03 தசம் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், 500 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்புக்களை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் பாதிக்கப்படக் கூடிய மக்களே அதிகம் அவதியுறுகின்றனர் எனவும் இது முடிவுக்கு கொண்டுவருவதற்கு வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது எனவும் அன்டோனியோ குத்தேகிரஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக இரண்டு வேகங்களில் பதில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை ஆபத்தானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தற்போதே நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் செல்வந்த நாடுகள் தமது மக்களுக்கு தடுப்பூசி மருந்துக்களை வழங்கி, பொருளாதார செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் என அன்டோனியோ குத்தேகிரஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் வறிய நாடுகளில் கொரோனா வைரஸ்சானது தொடர்ந்தும் பிறழ்வடைந்து மேலும் அதிகளவான பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் அதேவேளை உலக பொருளாதார வீழ்ச்சியும் மந்தமடையும் என கூறியுள்ள அவர், ஒரே தடவையில் ஒரு நாட்டினால் கொரோனா தொற்றை முற்றாக ஒழிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.