ஹமில்டன் நகர மண்டபத்திற்கு அருகில் முகக் கவசம் அணிவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
மாகாண அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகளுக்கு எதிராக வார இறுதி நாளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட Hugs over Masks என்ற குழுவைச் சேர்ந்த மூவருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகளை மீறி முகக் கவசத்தை அணியாமல், நகர மண்டபத்திற்குள் பிரவேசித்தார்கள் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்த காவல்துறையினர் குறித்த மூவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்துள்ளனர். 52 மற்றும் 49 வயதான ஆண்களுக்கு எதிராகவும் 32 வயதான பெண் ஒருவருக்கு எதிராகவும் இவ்வாறு குற்றஞ்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அவசர நிலைமையின் கீழ் அமுல்படுத்தப்பட்ட விதிகளை பின்பற்றத் தவறியமை, பலவந்தமாக உள்நுழைந்தமை, அமைதியை நிலைநாட்டு ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுப்பவர்களுக்கு எதிராக அவசர முகாமைத்துவம் மற்றும் சிவில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என ஹமில்டன் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வீட்டிலேயே இருக்க வேண்டும் உள்ளிட்ட ஏனைய விதிகளை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.