சீனாவை எதிர்கொள்ள ஈழத் தமிழர்கள் தேவை – ராமதாஸ்

இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப்பெறுவது, இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகவே சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க முடியும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் வைத்தியர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எனவே அதற்கேற்ற வகையில் இலங்கை சார்ந்த தனது வெளியுறவுக் கொள்கையை இந்தியா மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் உள்ள நெடுந்தீவு, அனலைத் தீவு,நயினாத் தீவு ஆகிய மூன்று தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளியை ஆதாரமாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம்இ சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதுப்பிக்கதக்க சக்தி திட்டமாக இது தோன்றினாலும், இந்தியாவிற்கு பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலானது என ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை சண்டையிட்டு சீனா கைப்பற்றியமைக்கும் அந்த ஒப்பந்தம் தமக்கு கிடைக்காமை குறித்து இலங்கை அரசிடம் இந்தியா கண்டனம் தெரிவித்ததற்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலப்பரப்பின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற விருப்பத்தின் காரணம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

குறித்த தீவுகளில் இந்தியாவுக்கு எதிரான இராணுவத் தளமாக மாற்றிக்கொள்ளும் நோக்குடனேயே அந்த தீவுகளில் மின்னுற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை சீனா பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.